search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் சுட்டுக்கொலை"

    அரியானா மாநிலத்தில் பேருந்தில் இருக்கைக்காக நடைபெற்ற சண்டையில் 24 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், மோகித் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழன் கிழமை அன்று மிலனை சந்தித்த மோகித்தும் அவனது நண்பர்களும் மிலனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

    இதையடுத்து, மிலன் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், வியாழன் அன்று இரவு மோகித்தின் நண்பர்கள் இருவர் மிலனின் வீட்டிற்கு வந்து மிலனை சந்திக்க வேண்டும் என அவரது தாயார் சரளாவிடம் கேட்டுள்ளனர். மேலும், மிலனுக்கும் மோகித்துக்குமான சண்டையை சரிசெய்யவே சந்திக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மிலன் குமார் வெளியே வந்ததும், அவரது தாயாரிடம் அந்த நபர்கள் குடிக்க நீர் கேட்க, அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அடுத்த கணமே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்து பார்த்துள்ளார். மிலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருப்பதை கண்ட அவரது தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால், மருத்துவர்கள் மிலன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து, மோகித் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும், கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
    ×